முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கில், கோட்டாபய கடற்படை முகாம் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 'அரிச்சல்பாடு' என்னும் கடற்றொழில் இறங்குதுறையினை எல்லைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்தில் கடந்த திங்கட்கிழமை (28) இடம்பெற்ற கடற்றொழில் இறங்குதுறைகளை எல்லைப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டிலுள்ள 41கடற்றொழில் இறங்குதுறைகளையே தாம் எல்லைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர், குறித்த 'அரிச்சல்பாடு' என்னும் இறங்குதுறைக்குரிய உரிமையாளர், இறங்குதுறைக்கான பணத்தை செலுத்தினால் அந்த இறங்குதுறையினையும் எல்லைப்படுத்த தம்மால் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.