பாணந்துறை, வலாணை பகுதியில் வைத்து கடத்தப்பட்ட வர்த்தகர் ஒருவர், மினுவன்பிட்டி மயானத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு 10.00 மணியளவில் பாணந்துறை, வலாணை, மகாநாம வீதிப் பகுதியில் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்.
வேறொரு வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத குழுவொன்று, வர்த்தகரின் காரைப் பின்தொடர்ந்து வந்து தாக்குதல் நடத்தி, அதன் கண்ணாடிகளை உடைத்து அவரை பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் வர்த்தகரின் இரு மகள்களுக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. எனினும், காயமடைந்த அவரது மனைவி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட வர்த்தகரும் அங்கேயே அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நிதித்தகராறு ஒன்றின் காரணமாகவே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவத்தின் போது வர்த்தகரின் வாகனம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
