அஸ்வெசும நலன்புரி உதவித்தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக அரச வங்கிகளில் புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்க மக்கள் அதிகளவில் வருகை தருவதால், வங்கிகளில் நெரிசல் நிலவுவதுடன் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள இரு அரச வங்கிகளில் புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்காக மக்கள் அதிகளவில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நாளில் சுமார் 50 பேருக்கு மாத்திரமே புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்க முடியும் எனக் கூறப்படும் நிலையில், இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு அடுத்தநாள் வருகைதருமாறு கூறி இலக்கம் வழங்கப்படுகின்றது. தூர இடங்களில் இருந்து வருகை தந்து அலைக்கழிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், உடல் இயலாமையுடையவர்கள் மற்றும் நீண்ட நேரம் காத்திருக்க முடியாதவர்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய வங்கிக் கணக்குகளைத் தவிர்த்து, அஸ்வெசும உதவித்தொகையைப் பெற்றுக்கொள்வதற்காகப் புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையே இத்தகைய சிரமங்களுக்குக் காரணம் எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அஸ்வெசும உதவித்தொகையை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளிலேயே வைப்பிலிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், மக்கள் இவ்வாறான அலைச்சல்களையும் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்காது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, முதியவர்கள் மற்றும் உடல் இயலாமையுடையவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, ஏற்கனவே உள்ள வங்கிக் கணக்குகள் ஊடாகவே உதவித்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.