இன்று ஆட்சியில் இருப்பவர்கள் பொறுப்புள்ள அமைச்சர்களாகச் செயற்படாமல், வீதிகளில் சண்டியத்தனம் செய்யும் ரவுடிகளைப் போல நடந்துகொள்கின்றனர். இவ்வாறான வெற்று மிரட்டல்களுக்கு விவசாய சமூகம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. உர மானியத்தை வழங்கத் தவறிய அரசாங்கம் தேர்தலை கண்டு நடுங்குகிறது என தேசிய விவசாய ஒற்றுமை ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார்.

தேசிய விவசாய ஒற்றுமை காரியாலயத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

நேற்று நடைபெற்ற உலகத் தொழிலாளர் தினமானது, இந்நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அமையவில்லை.

மாறாக, அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிப்பதற்கும், ஒருவரையொருவர் மிரட்டிக் கொள்வதற்குமான மேடையாகவே அது அமைந்திருந்தது. குறிப்பாக, அநுர அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் மேடைகளில் மக்கள் கூட்டத்தைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டு, வரலாற்றை மறந்து பேசுகின்றனர்.

பொலன்னறுவை மாவட்ட பிரதிநிதியான டி.பி. சரத் போன்றவர்கள், தாம் ஆட்சிக்கு வரும்போது நாட்டில் ஒரு பிடி நெல் மணிகூட இல்லை என்றும், உரத்தட்டுப்பாடு நிலவியதாகவும் அப்பட்டமான பொய்களைக் கூறுகின்றனர்.

2024 செப்டம்பரில் ஜனாதிபதி பதவியேற்ற போது, அதற்கு முன்னரே பெரும்போகச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, சந்தையில் போதியளவு நெல் இருப்பு இருந்தது என்பதே உண்மை. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் நாம் போராடிப் பெற்ற உர மானியத்தை, இந்த அரசாங்கம் முறையாக வழங்கவில்லை. உர மானியத்தை வழங்கத் தவறிய அரசாங்கம் தேர்தலை கண்டு நடுங்குகிறது ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாவாக இருந்த மானியத்தை 35,000 ரூபாவாக உயர்த்துவதாகக் கூறிவிட்டு, இன்றுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அந்தப் பணம் வைப்பிலிடப்படவில்லை. மாறாக, விவசாயிகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குப் போதுமான அளவு உரத்தை வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர்.

விவசாயத்துறை அமைச்சில் நடக்கும் ஊழல்களையும், மோசடிகளையும் தடுத்து நிறுத்த முடியாத அமைச்சர்கள், மேடைகளில் சண்டியத்தனம் பேசுவது வேடிக்கையானது. அசுர வேகத்தில் வீரம் பேசும் லால் காந்த போன்ற அமைச்சர்களுக்கு நாம் ஒன்று கூற விரும்புகிறோம். உங்கள் மிரட்டல்களை வைத்துக்கொள்ளுங்கள், சிறைச்சாலைகளுக்கோ அல்லது உங்கள் அடக்குமுறைகளுக்கோ அஞ்சும் நிலையில் விவசாயிகள் இல்லை. முதுகெலும்பு உள்ள அமைச்சராக இருந்தால், உடனடியாக விவசாயிகளின் நிலுவைப் பணத்தை வழங்க நடவடிக்கை எடுங்கள்,

இன்று அரசாங்கம் மேடைகளில் கத்துவது அவர்கள் அடைந்துள்ள தோல்வியின் பயத்தையே காட்டுகிறது. நாடு சரியான திசையில் செல்வதாகக் கூறிக்கொண்டு, ஒரு சிறிய தவறைக்கூடத் திருத்திக்கொள்ள இவர்கள் தயாராக இல்லை. இன்று பலமான எதிர்க்கட்சி ஒன்று நாட்டில் இல்லாதது அரசாங்கத்திற்குச் சாதகமாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த அரசாங்கத்திற்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.