கண்டி - குண்டசாலை மற்றும் பல்லேகலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண 38 பில்லியன் ரூபாய் நிதி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாக நீர் விநியோக வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் சாந்த பண்டார தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நீர் விநியோகத்திட்டம் மூலம் குண்டசாலை, பல்லேகல, ஹாரகம, பாத்தஹேவாஹெட்ட, பாத்ததும்பறையின் சில பகுதிகள் உற்பட 06 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்க நீர் விநியோகிக்கப்பட உள்ளது. 2012ம் ஆண்டு முதல் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இருப்பினும் இதன் ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்த ஒரு இந்திய நிறுவனம் 2019ம் ஆண்டு முறிவடைந்த நிலையில் இத்திட்டம் இடை நடுவே கைவிடப்பட்டது.
இருப்பினும் நீர்வடிகாலமைப்பு சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 38 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணிகள் தொடரப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கான நீரை கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்லைப் பகுதிகளில் இருந்து பெறப்படவுள்ளதகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.