அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் பௌத்த சாசனம் குறித்த கவலைகளை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்டக் குழுவிடம், ஆதாரங்கள் இல்லாமல் எவரையும் குற்றஞ்சாட்டுவது பொருத்தமற்றது என மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே சுமங்கல தேரர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை (12) மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன் போது அக்குழுவினரால் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதே, மகாநாயக்க தேரர் அவற்றை நிராகரித்து கருத்துக்களை வெளியிட்டார்.
சட்டமூலங்கள் நிறைவேற்றப்படும் வரை பௌத்த மதம் மற்றும் துறவிகள் தொடர்பில் இடைக்கால ஏற்பாடுகளைச் செய்ய நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த மகாநாயக்க தேரர், இது தொடர்பான சட்டங்கள் குறுகிய காலத்தில் கொண்டுவரப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் மக்கள் ஆதரவு சரிந்து வருவதாகவும், பௌத்தர்களின் நலன்களைப் புறந்தள்ளிச் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற முயற்சிகள் நடப்பதாகவும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டினர். அத்துடன் சமூக ஊடகங்களில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தனர்.
சமூக ஊடக அவதூறுகளுக்கு அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியபோது, அதனை மறுத்த மகாநாயக்க தேரர், ஆதாரங்கள் இன்றி குறிப்பிட்ட அரசியல் கட்சியைக் குற்றஞ்சாட்டுவது பொறுத்தமற்றது எனச் சுட்டிக்காட்டினார். 'நாம் அவ்வாறு கூறக்கூடாது' எனக் குறிப்பிட்ட அவர், யார் செய்திருந்தாலும் அது தவறான விடயம் எனத் தெரிவித்தார்.
பௌத்த மதம் பலவீனப்படுத்தப்படலாம் என அஞ்சுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் இதன் போது குறிப்பிட்டனர். இதற்கு பதிலளித்த மகாநாயக்க தேரர், பௌத்த நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து முன்னர் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நடைமுறையில் உண்மையாகவில்லை என்றும், அரச தலைவர்கள் பௌத்த மற்றும் ஏனைய மத நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதையும் சுட்டிக்காட்டி நிதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தினார்.
தற்போதைய அரசியல்வாதிகளைப் பழைய வன்முறைச் சம்பவங்களுடன் இணைத்துப் பேச முற்படக் கூடாது என்றும், அவர்கள் தலதா மாளிகையின் மீது குண்டு தாக்குதல்கள் மேற்கொண்டதாக ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.