பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா தாக்கல் செய்த இந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஆனந்த விஜயபால ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாக பணியாற்றியுள்ளார். இதன் மூலம், அரசியலமைப்பின் பிரகாரம் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் தகுதியை இழக்கின்றார் என தீர்ப்பளிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனு, நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே ஆனந்த விஜயபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி ரேணுகா பெரேராவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தானை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், பிரதிவாதியான அமைச்சர் அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு சம்பளத்தையும் பெறவில்லை என்றும், ஜனாதிபதி அம்மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் சட்டமா அதிபர் முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த வருடம் அந்த மனுவை நிராகரித்திருந்தது.
இதனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி ரேணுகா பெரேரா உயர்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார். நேற்றைய தினம் மன்றில் பிரதிவாதி தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம், அமைச்சர் விஜயபால ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக கடமையை மாத்திரமே செய்தார் எனினும் அதற்கான சம்பளத்தை பெறாததால் அவர் அரச ஊழியராகக் கருதப்பட மாட்டார் என்றார்.
மேலும் பிரதிவாதிசார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜீவ பெரேரா, பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் போது. அந்நபர் அரச பதவியில் இருந்தால் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் என நீக்கப்படுவார் என மன்றில் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் நேற்றைய தினம் மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சமர்பனங்களையும் பரிசீலித்த மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, இந்த மேன்முறையீடு தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்துவதற்கு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, குறித்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.