புத்தக மீளாய்வு குழுவை உடனடியாக கலைத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல் குர்ஆன் பிரதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாயர் எம்.ஆர்.எம்.பைஸர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கையளித்துள்ள மஹஜரிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நலன்களையும் கவலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சியான முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் உறுப்பினர்களும் பதவியாளர்களுமான நாம், உங்களின் அவசர கவனத்திற்கு இக்கடிதத்தை மரியாதையுடன் சமர்ப்பிக்கிறோம்.
இலங்கை செய்திகள்
புனித குர்ஆன் வெளியீடுகளை இறக்குமதி செய்வதும் விநியோகம் செய்வதிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் சிரமங்கள் குறித்து எங்களுக்கு ஆழ்ந்த கவலை உள்ளது. குறிப்பாக, சவுதி அரேபியாவின் கிங் பஹ்த் புனித குர்ஆன் அச்சக வளாகத்தில் அச்சிடப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் பிரதிகள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொது தகவல்களின் படி, அரசும் எதிர்க்கட்சியும் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டி ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இஸ்லாமிய வெளியீடுகளை பரிசீலிக்க அமைக்கப்பட்ட தற்காலிக புத்தக மீளாய்வு குழுவின் செயல்பாடுகள் தேவையற்ற தாமதங்களையும் சிரமங்களையும் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் பின்வரும் கோரிக்கையை முன்வைக்கிறோம், தற்போதைய எட்டு உறுப்பினர்களைக் கொண்ட புத்தக மீளாய்வு குழுவை உடனடியாக கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குழுவின் முடிவுகள், செயல்முறைகள் மற்றும் நடத்தைகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களின் மத உரிமைகளை பாதித்திருக்கக்கூடிய ஏதேனும் முறைகேடுகள் அல்லது தாமதங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கை சட்டங்களுக்கு இணங்கும் அனைத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் மற்றும் பிற இஸ்லாமிய மத வெளியீடுகளை உடனடியாக விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் மத ரீதியிலான வெளியீடுகளை பரிசீலிக்கும் போது அனைத்து மதங்களுக்கும் சமமான முறையில் வெளிப்படையான மற்றும் நியாயமான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்கள் தங்களது புனித மத நூல்களை தடையின்றி மற்றும் சட்டப்படி அணுகுவதற்கான உரிமை இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாகும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வுரிமைக்கு தேவையற்ற தடைகள் சமூகத்தில் மனஅழுத்தத்தையும் மத நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, இவ்விடயத்தில் தங்களது அவசர தலையீடும் சாதகமான நடவடிக்கையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.