ஆப்கானிஸ்தானின் வடக்கு தகார் மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்து விழுந்ததில் ஐந்து சுரங்கத் தொழிலாளர்கள் நேற்று சனிக்கிழமை (03) உயிரிழந்துள்ளனர்.

தகார் மாகாணத்தின் சாப் மாவட்டத்தின் ஷா மஸ்தான் பகுதியில் இந்தச் சுரங்கம் அமைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 05 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்,  இதே மாவட்டத்தின் சம்தி பகுதியில் உள்ள மற்றொரு தங்கச் சுரங்கத்தில் இரண்டு நாட்களாகச் சிக்கியிருந்த 10 சுரங்கத் தொழிலாளர்கள் இந்த வார ஆரம்பத்தில் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் எப்படிச் சிக்கிக் கொண்டார்கள் என்பதற்கான துல்லியமான காரணங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

ஆப்கானிஸ்தானில் இரும்புத் தாது, செம்பு, ஈயம், துத்தநாகம், தங்கம், நிலக்கரி மற்றும் ரத்தினக் கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் நிறைந்துள்ள  சுரங்கச் சரிவுகளில்  இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.