நாட்டின் கல்வி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது, சிறுவர்களே எமது முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் எனவும், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட நாடு எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு நெருக்கடி நிலைமையிலும் கல்வியை எவ்விதத் தடையுமின்றித் தொடர்வதற்குத் தேவையான திட்டங்கள் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை (18)  மாகாணக் கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற பாடசாலை அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பாடசாலை முறைமையில் நிர்வாக நடவடிக்கைகளையும் கற்பித்தல்–கற்றல் செயற்பாடுகளையும் மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காகத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை செயற்பாட்டுடன் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும்போது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொருத்தமான வயது வரம்புகள் மற்றும் பயன்பாட்டு நேரங்கள் தொடர்பான பாதுகாப்பு வழிகாட்டல்களைத் தயாரிப்பதற்கும், அது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

எல் நினோ மற்றும் பல்வேறு அனர்த்த நிலைமைகள் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கடும் மழை மற்றும் வறட்சி நிலைமைகள் கல்விச் செயற்பாடுகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இத்தகைய அனர்த்த நிலைமைகளின்போது சிறுவர்களின் போஷாக்கு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, அதிக வெப்பநிலை நிலவும் காலங்களில் விளையாட்டு விழாக்கள் போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும்போது சிறுவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாமலும் தேவையற்ற உடல் சோர்வுக்கு ஆளாகாமலும் இருப்பதை உறுதிப்படுத்தும் அதேவேளை தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் பழைய அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவு செய்து, புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தோடு கல்வித்துறையில் தீர்மானங்களை எடுக்கும்போது பிரதேச அல்லது மாவட்ட வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல், எப்போதும் சிறுவர்களின் நலன்புரிக்கும் தொடர்ச்சியான கல்விக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.