இன்று முதல் பல்கலைக்கழகங்களில் ‘கறுப்பு வாரம்’ பிரகடனம்
Ad Space
Ad Space
Ad Space
இலங்கையின் அரசப் பல்கலைக்கழக அமைப்பில் நீடித்து வரும் கடுமையான பிரச்சினைகளுக்கு உடனடியாக முறையான தீர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த வாரத்தைக் ‘கறுப்பு வாரமாக’ பிரகடனப்படுத்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.இது குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,நாட்டின் பல்கலைக்கழகக் கட்டமைப்பானது இருண்ட எதிர்காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் மௌனப் போக்கிற்குத் தீவிர எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பிரதான வாசல்களிலும் கறுப்புக் கொடிகளை ஏற்றி, வளாகங்களைச் சுற்றி கறுப்புக் கொடிகளால் அலங்கரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், புதன்கிழமையன்று அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மற்றும் ஆசிரியர்களும் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து பணிக்குச் சமூகமளித்துத் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தவுள்ளனர். இதன் பின்னரும் முறையான தீர்வு கிடைக்காவிடில், பொதுமக்கள் மற்றும் மாணவர் அமைப்புகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழிற்சங்கப் போராட்டங்களை அடுத்தகட்டத்திற்கு தீவிரமாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, பல்வேறு முன்மொழிவுகளும் உடன்பாடுகளும் எட்டப்பட்ட போதிலும், அவை எதுவுமே நடைமுறைப் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாகப் பல்கலைக்கழகக் கல்வித் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, உயர்தரப் பரீட்சை எழுதிப் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல வருடங்களாகத் தமது பிள்ளைகளின் உயர்கல்வியைக் கனவாகக் கொண்டுள்ள பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.இதற்கிடையில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை ஏற்று அதில் பங்கேற்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெறும் வாக்குறுதிகளுடனான பேச்சுவார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னரும் கல்வித் துறை சார்ந்த சிக்கல்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்பதால், இம்முறை அரசாங்கத்திடமிருந்து தெளிவான மற்றும் உறுதியான தீர்வுகள் கிடைக்கும் வரை ஆரம்பித்துள்ள தொழிற்சங்கப் போராட்டங்களை எக்காரணம் கொண்டும் கைவிடப்போவதில்லை என்றார்.
Ad Space
Ad Space
Ad Space