இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தகவலைச் சாம்பா மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை உறுதி செய்துள்ளது. படுகாயமடைந்த 6 பேர் உட்பட மொத்தம் 10 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காகச் சாம்பா பண்டிட் ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் உடனடியாக வழங்குமாறு அவர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 185 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதில் மண்டியில் 92, குலுவில் 48, சாம்பா மற்றும் சிம்லாவில் தலா 14 சாலைகள் அடங்கும். மேலும், 77 குடிநீர் திட்டங்களும், 104 மின் மாற்றிகளும் முடங்கியுள்ளன. இத்தகவலை மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 30-ல் பருவமழை தொடங்கியது முதல் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ரூ.834 கோடி மதிப்பிலான சேதமும் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 வரை மழை நீடிக்கும் என்பதால், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என சிம்லா வானிலை மையம் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்துள்ளது.