அநுராதபுரம் ருவான்வெலிசாய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தாரதன தேரரை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.

ருவான்வெலிசாய அன்னதான வளாகத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப்  போராட்டத்தின் போது, கடந்த 12 ஆம் திகதி  போராட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற குழுவினர் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சத்தாரதன தேரர் உள்ளிட்ட நால்வர் அநுராதபுரம் தலைமையக பொலிஸாரால்  நேற்றைய தினம்  கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இதன்போது மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிவான் இராஜாங்கனை சத்தாரதன தேரரை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக, இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சத்தாரதன தேரர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களை ஏன்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பது குறித்து, நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அநுராதபுரம்   நீதீவான்  நேற்று முன்திம்  (17) உத்தரவிட்டிருந்தார்.

நீதிவானின் இந்த உத்தரவுக்கு அமையவே, மோதலுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் இராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட சிலரிடம் வாக்குமூலம் பெறுவதுக்காக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் கைது  செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.