இலங்கையில் எல்நினோவின் உச்சம் இந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நிலவும் வாய்ப்புள்ளது. உருவாகியுள்ள எல்நினோ இலங்கையின் நீர்வளத்துறை மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், இலங்கையின் விவசாயத் துறை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, நெற்செய்கை மற்றும் ஏனைய தானியச் செய்கைகள் பாதிக்கப்படும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கைக்கு எல்நினோவின் நிலைமைகள் எவ்வாறு அமையும்? எனக் கணிப்பது சிரமமானது. ஏனெனில், இந்துசமுத்திர மேற்பரப்பில் இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண்ணின் தொழிற்பாடு எல்நினோவின் செல்வாக்கை அதன் சமுத்திரப் பகுதியில் எந்த அளவுக்கு அனுமதிக்கும்? என்பதிலேயே இலங்கையின் பாதிப்புக்கள் அமையும்.
எனினும், பல மாதிரிகளின் கணிப்பின் பொதுமைப்படுத்தலின் ( Multi model Ensemble) அடிப்படையில் பின்வரும் நிலைமைகள் தற்போது உருவாகியுள்ள எல்நினோவினால் இலங்கைக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம்- 20 ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையைச் சூழவுள்ள இந்துசமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை +1.6 பாகை செல்சியஸ் அளவில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதன்பின் ஓகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில்+2.6 பாகை செல்சியஸ் அளவில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஜுலை மாதத்தின் பிற்பகுதி முதல் செப்ரெம்பர் மாதத்தின் இறுதி வரை அதிக வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நிகழவுள்ள அதிக ஆவியாக்கம் மற்றும் ஆவியுயிர்ப்பு இலங்கையின் பல பகுதிகளுக்கும் வரண்ட வானிலைக் கோலங்களை உருவாக்கலாம். எனினும், ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதத்தின் பிற்பகுதியில் இருந்துசமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கும். அதன் தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலப் பகுதிகளின் வளி வெப்பநிலை அதிகரிக்கும். ஓகஸ்ட் மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வெப்பநிலை 2.8 பாகை செல்சியஸை விடக் கூடுதலாக அதிகரிக்கும். ஒக்ரோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து மழை கிடைக்கத் தொடங்கிப் பின்னர் படிப்படியாக அதிகரிக்கும். இந் நிலைமை நவம்பர் மாத இறுதி வரை நிகழும்.
ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகளில் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடிய மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளன.
கிழக்கு மாகாணத்தின் கரையோரங்கள் தனித்து வங்காள விரிகுடாவாக காணப்படுவதனால் வங்காள விரிகுடாவில் காணப்படும் இந்துசமுத்திர வெப்பச் சுட்டெண் எல்நினோவின் பாதிப்பினைத் தீர்மானிக்கும். ஆனால், வடக்கின் நிலைமை குழப்பமானதாக அமையும். ஏனெனில், வடக்கு மாகாணத்தின் கிழக்கு எல்லை வங்காள விரிகுடா... மேற்கு எல்லை அரபிக்கடல். இரண்டுமே வேறு வேறான தன்மை கொண்ட வெப்பச் சுட்டெண்ணைக் கொண்டவை. அதேவேளை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எதிரெதிர் தன்மை கொண்ட சுட்டெண்களாகவே அமைபவை. உதாரணமாக அரபிக் கடலில் நேர்மறையான இந்து சமுத்திர வெப்பச்சுட்டெண் அமைந்தால் வங்காள விரிகுடாவில் எதிர்மறையான வெப்பச் சுட்டெண் அமையும்.
அதேவேளை நேர்மறையான வெப்பச் சுட்டெண் அரபிக் கடலில் நிகழ்ந்தால் அதன் செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் கனமழையைப் பொழிவிக்கும். ஆனால், வங்காள விரிகுடாவில் எதிர்மறையான வெப்பச் சுட்டெண் அமைந்தாலே அதன் செல்வாக்குக்குட்பட்ட பகுதிகளில் கன மழையைப் பொழிவிக்கும். இந்த இரண்டு வேறுபட்ட வெப்பச் சுட்டெண்ணும், எல்நினோவும் இணையும் போது ஒரு தீவிரமான வானிலை நிகழ்வுக்கு வழியமைக்கும். அது சமுத்திரத்திலும், நிலப் பகுதிகளிலும் அதிக வெப்பநிலையுடன் கூடிய கடும் வரட்சியாகவோ அல்லது சமுத்திரப்பகுதியின் அதிக வெப்பநிலையுடன் கூடிய கடும் மழை வெள்ளமாகவோ அமையலாம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.