பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் உயிரிழந்த இஷார ஹர்ஷகுமாரின் மரணத்தைச் சூழவுள்ள அனைத்து சந்தர்ப்பங்களும் முழுமையாகவும் சுயாதீனமாகவும் கண்டறியப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கரிசனையை வெளியிட்டுள்ளது.
கிரிவத்துக்கொடையைச் சேர்ந்த 29 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான இஷார ஹர்ஷகுமார், போதைப்பொருள் தொடர்பான விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
உயிரிழந்தவரின் நிலைமை தொடர்பில் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (25) காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற அவரது உறவினர்கள், அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும், அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், சுற்றிவளைப்பின்போது அவர் திடீரென சுகயீனமுற்றதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஷார ஹர்ஷகுமாரின் மரணத்தைச் சூழவுள்ள அனைத்து சந்தர்ப்பங்களும் முழுமையாகவும் சுயாதீனமாகவும் கண்டறியப்பட வேண்டும்.
மேலும், சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கருத்துகள் மற்றும் எழுப்பப்பட்டுள்ள கரிசனைகள் வெளிப்படையானதும் நம்பகமானதுமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
தடுப்புக்காவலில் இடம்பெறும் மரணங்கள் மிகவும் கவலைக்குரியவை எனத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், தடுப்புக்காவலில் வைக்கப்படும் ஒவ்வொருவரினதும் உயிர், ஆரோக்கியம் மற்றும் உடல்சார் கண்ணியத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் அடிப்படையானதும் சட்டப்பூர்வமானதுமான கடமை ஆகும்.
தடுப்புக்காவலில் வன்முறை அல்லது தவறான நடத்தைகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டும் மிகுந்த தீவிரத்துடன் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் 13(4)ஆம் பிரிவும் நீதித்துறையின் நியாயாதிக்கமும், தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் உத்தரவின்றி ஒருவருக்கு தண்டனையாக உயிரைப் பறிப்பதைத் தடை செய்கின்றன.
தடுப்புக்காவலில் உள்ளவர்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படுவதை சட்ட அமுலாக்க அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்நிலையில், ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், ஹோமாகம உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் கீழ் முதற்கட்ட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து நியாயமான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தவறு செய்ததாக நிரூபிக்கப்படும் எந்தவொரு நபரும் சட்டத்தின் பிரகாரம் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்.
அதன்படி, இஷார ஹர்ஷகுமாரின் மரணத்துக்கான காரணங்களை கண்டறிவதற்காக உடனடியான, பாரபட்சமற்ற, வெளிப்படையான மற்றும் முறையான விசாரணையை முன்னெடுக்குமாறும், தொடர்புடைய அனைத்து சான்றுகளும் முறையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
விசாரணைகள் எந்தவித இடையீடுகளும் அல்லது முன்கூட்டிய அனுமானங்களும் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், முறையான விசாரணையின் மூலம் தடுப்புக்காவல் வன்முறை அல்லது சட்டத்துக்கு முரணான உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் பிரகாரம் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்.
தேவையான பட்சத்தில் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், இது தொடர்பான முன்னேற்றங்களை தனது உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து அறிவிக்கவுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.