அரசியல் தலைவர்கள் ஊழல் அற்றவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கவேண்டும் எனச் சமூகம் எதிர்பார்க்குமானால், அவ்வாறான தலைமைத்துவம் உருவாவதற்கு ஒட்டுமொத்த சமூகத்திலும் நேர்மையும் ஒழுக்க விழுமியங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் அரசியல்வாதிகள் சமூகத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய பிரதி சபாநாயகர், எதிர்காலத் தலைவர்களான மாணவ சமூகத்தினர் பாடசாலைப் பருவத்திலிருந்தே நேர்மையானவர்களாக உருவாகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மாணவியருக்குப் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த பாடசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (ஜனாதிபதி நிதியம்) சுபாஷ் ரோஷன், ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சேவைகளை விளக்கினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஆ.சர்வேஸ்வரன் இலங்கையின் அரசியலமைப்பு தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். அத்துடன், பாராளுமன்றத்தின் பிரதான உத்தியோகத்தர் ரீ.என்.எம்.பி.ஷஹீட் பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கவுரை ஒன்றை நிகழ்த்தினார்.

மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, சபாநாயகர் தேர்தல் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்புடன் தொடங்கியது. இதன் அமைச்சர்கள் தங்கள் அமைச்சுக்களின் சார்பில் பாடசாலையில் செயற்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதி தவிசாளர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்துக்குப் பொறுப்பான ஆசிரியை சிந்தூரி பத்மராஜ் நன்றியுரை ஆற்றினார்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல, சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி இராஜவிஜயன் சார்பில் பிரதி அதிபர் மலர்விழி ஸ்ரீகுமார், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

















