தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் பேருந்துகளில் பெண்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயண திட்டத்தை கடந்த திமுக அரசு செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தி, தற்போது புறநகர் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் தவெக அரசு வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் வெற்றிப் பயண சிறப்புப் பேருந்துகளில் ரூ.5 வீதம் கட்டணம் வசூலிப்பதற்கு இடதுசாரிக் கட்சியினர் மற்றும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய ஐக்கிய தொழிற்சங்க கவுன்சில் மாநிலச் செயலாளர் ஆர்.சொர்ணக்குமார் கூறியது: தமிழகத்தில் நகர் மற்றும் புறநகர் பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் வெற்றிப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தீபாவளிக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்புப் பேருந்துகளில் பெண்களிடம் ரூ.5 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, பெண்களை ஏமாற்றும் செயலாகும். ஏற்கெனவே பயிர்க் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாகக் கூறி, விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர்.

எனவே, பேருந்துகளில் பெண்களிடம் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும் என்றார். இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கூறும்போது,‘தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் வழக்கமான வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்ட பிறகு, பிற பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.

வெற்றிப் பயண திட்ட நடைகள் முடிந்த பிறகு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் மட்டுமே பெண்களிடம் ரூ.5 வீதம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்றனர்.