சமூக ஊடகப் பதிவு ஒன்றின் காரணமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அம்பாறையைச் சேர்ந்த ஈழத்தமிழ் இளைஞன் சிவராசா அனோஜனின் மரண தண்டனைத் தீர்ப்பை சவூதி அரேபிய உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

முகநூலில் இஸ்லாம் மதத்தின் இறைவன் நபிகள் நாயகம் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்தொன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 24 வயதான அனோஜனுக்கு கடந்த ஜூலை மாதம் சவூதி கீழ் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்திருந்தது. இதனை எதிர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டை அடுத்து செப்டம்பர்- 17 ஆம் திகதி சவூதி அரேபியாவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இந் நிலையில் இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சவூதி சட்டக் குழுவினர் இணைந்து அக்டோபர் மாதம்- 11, 12 ஆகிய திகதிகளில் சவூதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மேன்முறையீட்டு மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் அக்டோபர் மாதம்- 13 ஆம் திகதி அவரது மரண தண்டனையை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. 

இதேவேளை, இலங்கை அரசாங்கம் மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை தொடர்ச்சியாக முன்னெடுத்த தீவிர இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் பின்னரே இந்த சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளது என இலங்கையின் வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதிப்படுத்தியுள்ளார்.