உள்நாட்டு மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உண்மை மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல், பாதிக்கப்பட்ட சகல சமூகங்களினதும் காயங்களை ஆற்றுதல், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு, புலம்பெயர் சமூகத்தினருடனான ஒன்றிணைவு என்பவற்றுக்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து காலந்தாழ்த்தக்கூடாது. அவை நிலையானதும், ஒற்றுமையானதும், சுபீட்சமானதுமான எதிர்காலத்துக்கான முதலீடுகளாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
'கறுப்பு ஜூலை' வாரத்தை முன்னிட்டு தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
எமது நாட்டின் வரலாற்றில் மிக இருண்டதும், துயர் நிரம்பியதுமான அத்தியாயங்களில் ஒன்றான 1983ஆம் ஆண்டின் 'கறுப்பு ஜூலை' கலவரத்தை ஜூலை மாதத்தின் பிற்பகுதி நினைவூட்டுகிறது.
எமது நாட்டில் இவ்வாறான மிகக்கொடூரமான வன்முறைகள் நிகழ்ந்தன என்ற இன்னமும் நம்பமுடியாத ஒரு விடயமாக இருக்கிறது. எனினும் அச்சம்பவம் நிகழ்ந்தது. எமது வரலாற்றைப் பொறுத்தமட்டில் வெறுப்பு, அச்சம் மற்றும் பிரிவினை ஆகிய உணர்வுகள் இறுதியில் பெருந்துயரத்தில் முடிந்த தனியொரு சம்பவம் இது மாத்திரமல்ல. மாறாக இதன் விளைவுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நாம் ஒரு நாடாக சுமார் மூன்று தசாப்தங்கள் நீடித்த ஆயுதமோதலில் சிக்குண்டோம். அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. பல குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. அதுமாத்திரமன்றி எமது நாடு பெருமளவான வாய்ப்புக்களை இழந்தது.
வரலாற்றை மீண்டும் புதிதாக எழுத முடியாது. ஆனால் நாம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். அதேபோன்று இனம், மதம் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், இத்தகைய கொடூரங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவது ஒன்றே இந்தக் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் நாம் செலுத்துகின்ற அஞ்சலியாகும்.
மூன்று தசாப்தகால மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாடு பல்வேறு அடைவுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக நிலையான அமைதியை மீட்டெடுத்திருக்கிறோம். உட்கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைத்திருக்கிறோம். உள்ளகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தியிருக்கிறோம். சகல சமூகங்களும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறோம். இவற்றை ஒருபோதும் குறைமதிப்பீடு செய்யமுடியாது.
எனினும் எமது இந்தப் பயணம் இன்னமும் நிறைவடையவில்லை. இன, மத, மொழி பேதங்களின்றி, ஒவ்வொரு பிரஜையும் அமைதி, பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் சுயமரியாதையுடன் வாழக்கூடிய இலங்கையை நாம் கட்டியெழுப்பவேண்டும்.
இருப்பினும் இன, மத பேதங்களையும் சமூகங்களுக்கு இடையிலான பிளவுகளையும் சீரமைப்பதற்குப் பதிலாக, அவற்றை மீண்டும் தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது வருந்தத்தக்க விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகள் கடந்தகால வடுக்களை மீண்டும் கிளறுவதற்கும், பரஸ்பர நம்பிக்கையை சீர்குலைப்பதற்கும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பணிகளிலிருந்து எம்மைத் திசைதிருப்புவதற்குமே வழிகோலும்.
எந்தவொரு நாடும் அதன் கடந்த காலத்தை நேர்மையுடன் எதிர்கொள்வதற்கும், அதிலிருந்து பாடம் கற்பதற்கும், சமூகங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்திய விடயங்களை முற்றாக நிராகரிப்பதற்கும், நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் முன்நோக்கிப் பயணிப்பதற்கும் துணிந்து முன்வராத வரை, அந்நாட்டினால் அதன் உண்மையான ஆற்றலை அடைந்துகொள்ளமுடியாது.
உள்நாட்டு மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நிறைவு செய்யப்படவேண்டிய பணிகள் இன்னமும் எஞ்சியிருக்கின்றன. உண்மை மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல், பாதிக்கப்பட்ட சகல சமூகங்களினதும் காயங்களை ஆற்றுதல், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு, புலம்பெயர் சமூகத்தினருடனான ஒன்றிணைவு என்பவற்றுக்கான நடவடிக்கைகளைக் காலந்தாழ்த்தக்கூடாது. அவை நிலையானதும், ஒற்றுமையானதும், சுபீட்சமானதுமான எதிர்காலத்துக்கான முதலீடுகளாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை, நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வை நோக்கிய நகர்வுகளைக் காலந்தாழ்த்தக்கூடாது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space