இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் சில மணி நேர இடைவெளியில் நிகழ்ந்த இரு வேறு மலைப்பாங்கான பகுதிகளில் பேருந்து மற்றும் பொலிரோ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை 4.30 மணியளவில் ஹரித்வாரிலிருந்து சமோலி நோக்கி 30–35 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று, குலார் பாலத்திற்கு கீழே குலார் பஜார் பகுதிக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.
அதில் குறைந்தது 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், மீட்கப்பட்ட சுமார் 20 காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பியாசி மற்றும் தல்வாலா மீட்புக் குழுவினரும், மாவட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் தளத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று (16) திங்கட்கிழமை இரவு 10.00 மணியளவில், ருத்ரபிரயாக் மாவட்டத்தின் பன்ஸ்வாடா–மோகன்கால் சாலையில் பொகாரியிலிருந்து ரான்சி நோக்கி 9–10 பயணிகளுடன் சென்ற பொலிரோ வாகனம் ஒன்று பத்வாரி-கந்தாரா அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.
அதில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், 08 வயதுச் சிறுமி உட்பட 06 பேர் காயமடைந்துள்ளனர்.