மலேசியாவின் பிந்துலு பகுதிக்கு வடக்காக ஒரு புதிய காற்றுச் சுழற்சி நேற்றுப் புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. இது நாளை வெள்ளிக்கிழமை ( 27.11.2026) மேற்கு, வட மேற்குத் திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்குத் தெற்காக நகரும். அதன்பின் மத்திய வங்காள விரிகுடாவுக்கு வரும்போது அது புயலாக வலுப் பெறும். இந்தப் புயலுக்கு மாலைதீவு இட்ட 'கானி' என்ற பெயர் வழங்கப்படும். இந்தப் புயல் எதிர்வரும்- 05 ஆம் திகதி இரவு திருகோணமலையின் ஊடாக ( கொட்டியாரக்குடாவுக்கு வடக்காக) கரையைக் கடந்து அதன் பின் மேற்கு நோக்கி நகர்ந்து வவுனியாவை ஊடறுத்து மன்னார் மற்றும் புத்தளத்தினூடாக அரபிக் கடலை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் புயலின் முழுப் பாதிப்பு வலயத்துக்குள் இலங்கை முழுவதும் உள்ளடங்குகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,    

இது இன்றைய நிலையில், இந்த நேரத்தில் மாதிரிகள் காட்டும் பாதை. இதில் மாற்றங்கள் நிகழலாம். இந்தப் பாதை அமையக்கூடாது என்பதே எனது விருப்பமும். சில மாதிரிகள் தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் எனவும் காட்டுகின்றன. ஆனால், இலங்கை போன்ற ஒரு வளரும் நாட்டுக்கும், மக்களுக்கும் ஒரு புயலின் கரை கடத்தலைத் தயார்ப்படுத்தக் கால அவகாசம் தேவை.

அண்மையில் 'அக்வான்' புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் என தயார்ப்படுத்திய போதும் புயல் ஒடிசாவில் கரையைக் கடந்தது. இதனால், ஆந்திராவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இந்தப் புயல், அது கரை கடக்கும் இடம், மற்றும் அதனால் ஏற்படும், சாத்தியமான பாதிப்புக்கள் தொடர்பில் உரிய அரச திணைக்களங்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். சாத்தியமான பாதிப்புக்கள் தொடர்பில் மக்களை விழிப்பூட்ட வேண்டும்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த 'டித்வா' வின் பாதிப்புக்களிலிருந்தே நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை. அன்புக்குரிய இலங்கை வாழ் மக்களே... இது உங்கள் அனைவரினதும் பாதுகாப்பிற்கானது. இதுதொடர்பான முக்கிய விபரங்கள் அவ்வப்போது வழங்கப்படும் என்றுள்ளது.