அமெரிக்காவின் மிகப் பிரபலமான மிருகக்காட்சிசாலை விலங்குகளில் ஒன்றான 'பியோனா' (Fiona) என்ற நீர்யானை, தனது கூட்டுக்குள் விழுந்த பின்னப்பட்ட தொப்பியொன்றை விழுங்கிய நிலையில், அதனை வெளியேற்ற முன்னெடுக்கப்பட்ட மருத்துவ முயற்சிகள் பலனளிக்காததால் உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவின் சின்சினாட்டி மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இத்துயரச் செய்தியைப் பகிர்ந்துள்ளது.
சுமார் 2,500 இறாத்தல் (1,113 கிலோ) எடையுடைய முழு வளர்ச்சியடைந்த பியோனாவிற்கு சத்திரசிகிச்சை செய்வது மிகவும் ஆபத்தானது என்பதால், சமிபாட்டுத் தொகுதியின் ஊடாக அத்தொப்பியை இயற்கையாக வெளியேற்றுவதற்கான மாற்று மருத்துவ முறைகளைக் கால்நடை மருத்துவர்கள் கையாண்டனர்.
மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்த பார்வையாளர் ஒருவர் தனது தொப்பியை மேலே தூக்கி வீசியபோது, அது கூரையிலிருந்த மின்விசிறியில் பட்டு பியோனா இருந்த பகுதிக்குள் விழுந்துள்ளது. உடனடியாக அத்தொப்பியை விழுங்கிய பியோனாவிற்கு ஆரம்பத்தில் எவ்வித உடல்நலக் குறைவும் தென்படவில்லை.
எனினும், சில நாட்களின் பின்னர் பியோனாவிற்குப் பசியின்மை ஏற்படத் தொடங்கியதை அடுத்து, சமிபாட்டுத் தொகுதியூடாகத் தொப்பியை வெளியேற்றும் நோக்கில் ஊழியர்கள் அதற்கு அதிகளவான உணவுகளை வழங்கினர்.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மயக்கமருந்து வழங்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் (ultrasound) மற்றும் 9 அடி நீளமுள்ள கொலோனோஸ்கோபி (colonoscopy) பரிசோதனைகளில், குடல் பகுதி அத்தொப்பியை வெளியேற்ற முயற்சிப்பது அவதானிக்கப்பட்டது.
இதற்கு உதவும் வகையில், குதிரைப் பண்ணையொன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட அதிர்வுத் தகடு (vibration plate) ஒன்றையும் மருத்துவக் குழுவினர் பயன்படுத்தினர்.
இருப்பினும், சமிபாட்டுத் தொகுதியிலிருந்து தொப்பியை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், பியோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சிசாலை நிர்வாகம் கவலையுடன் தெரிவித்துள்ளது.
பியோனாவின் மரணச் செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, மிருகக்காட்சிசாலைக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள நீர்யானைச் சிலைக்கு அருகில் மலர்களையும் இரங்கல் அட்டைகளையும் வைத்துப் பார்வையாளர்கள் தமது அஞ்சலியைச் செலுத்தத் தொடங்கினர்.
2017ஆம் ஆண்டு குறைமாதத்தில், அதாவது 6 வாரங்களுக்கு முன்னதாகவே வெறும் 29 இறாத்தல் (13.2 கிலோ) எடையுடன் பிறந்த பியோனா, எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் காணப்பட்டது. சின்சினாட்டி மிருகக்காட்சிசாலை ஊழியர்களின் அயராத பராமரிப்பினால் உயிர் பிழைத்த பியோனாவின் வளர்ச்சியைக் காட்டும் புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
2016ஆம் ஆண்டு சிறுவன் ஒருவன் கூட்டுக்குள் விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து 'ஹராம்பே' (Harambe) என்ற கொரில்லா சுட்டுக்கொல்லப்பட்டதால் சின்சினாட்டி மிருகக்காட்சிசாலை கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்த நிலையில், 2017இல் பியோனாவின் உயிர் பிழைப்பு அந்நிறுவனத்திற்குப் பெரும் நற்பெயரைப் பெற்றுக் கொடுத்திருந்தது.
விலங்குகளின் வாழிடங்களுக்குள் வெளிப்பொருட்கள் வீசப்படுவதால் ஏற்படும் பாரிய உயிராபத்துகள் குறித்து வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டென்னசி மிருகக்காட்சிசாலையில் பிளாஸ்டிக் மூடியொன்றை விழுங்கிய அரிய வகை மான் ஒன்றும், 2014ஆம் ஆண்டு ஜேர்மனிய மிருகக்காட்சிசாலையில் பார்வையாளர் தவறவிட்ட மேலங்கியை விழுங்கிய துருவக் கரடியொன்றும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.