ஊழலை இல்லாதொழிப்போம் , ஊழல் மோசடிக்காரர்களை கைது செய்வோம் என்று கூறி கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், உள்ளூராட்சி சபைகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து கண்டு கொள்வதில்லை.

எனவே தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களும் ஊழலுக்கு துணை போகின்றனரா என  கொட்டகலை பிரதேச சபையின்  மலையக மக்கள் முன்னணி உறுப்பினர் விஸ்வநாதன் புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொட்டகலை பிரதேச சபையின்  மாதாந்த அமர்வு 07 ஆம் திகதி புதன்கிழமை தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் இடம்பெற்ற போது உரையாற்றிய உறுப்பினர் விஸ்வநாதன் புஷ்பா, கொட்டகலை மைதானத்துக்கு மின் விளக்குகள் பூட்டப்பட்டு பின்பு கழற்றப்பட்டமை குறித்து பல தடவைகள் கேள்வியெழுப்பியும் பதில்கள் இல்லை.

ட்ரஸ்ட் நிறுவனம் வழங்கிய 78 இலட்சம் ரூபாய்க்கு என்ன நடந்தது? இது குறித்து பொறுப்பான பதில்களை தவிசாளர் வழங்கவில்லை. மேலும் ஊழல்காரர்களை கண்டு பிடிப்போம் என்று கூறிக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இங்கு உபதவிசாளராக இருக்கின்றார்.

அவர்களும் இது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதானது அவர்களும் ஊழலுக்கு துணை போகின்றனரா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றார். இதற்கு பதில் வழங்கிய தவிசாளர் மேற்படி மின் விளக்கு பொருத்தும் பணியை முன்னெடுத்த ஒப்பந்தக்காரருக்கு பல தடவைகள் கூறியும் அது குறித்து அக்கறை செலுத்தாமல் இருக்கின்றார்.

எனவே ட்ரஸ்ட் நிறுவனத்துக்கும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் இது குறித்து கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார். இதற்கு பதிலளித்த பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்யும் உபதவிசாளர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.