உஸ்பெகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் Centrum Air விமான நிறுவனம், தாஷ்கண்ட் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு இடையிலான தனது திட்டமிடப்பட்ட நேரடி விமான சேவையை நேற்று புதன்கிழமை (28) ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையிலான விமானப் போக்குவரத்துத் தொடர்பு மேலும் விரிவடைந்துள்ளதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இந்த விமான சேவையின் மூலம் இலங்கைக்கு வருகை தந்த உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.
2026–2027 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு, இந்த விமான சேவையை வாரத்திற்கு இருமுறை, அதாவது புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விமான சேவை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்புகள், சுற்றுலாப் பயணப் பரிமாற்றம் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Aitken Spence PLC நிறுவனத்தின் துணை நிறுவனமான Royal Spence Aviation, இலங்கையில் Centrum Air நிறுவனத்தின் பொது விற்பனை முகவராகவும் (GSA), விமான நிலைய மேற்பார்வை முகவராகவும் நியமிக்கப்பட்டுள்ளது.







