ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு சட்டமூலத்தை கொண்டு தனிமனித சுதந்திரத்தை கேலிக்குள்ளாக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனநாயகத்திற்கான சமூக ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டில் இடம்பெற்று வருகின்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மட்டும் பாதாள குழுக்களின் அதிகரித்த செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்தை கொண்டுவந்தமை பாராட்டுக்குரியது.
குறிப்பாக இச்சட்டத்தை கொண்டுவர இரு ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த சட்டமூலம் கொண்டுவந்ததில் எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் இச்சட்டத்தின் ஊடான அரசாங்கம் தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எத்தனித்துள்ளதாக எண்ண தோன்றுகின்றது.
குறித்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல பச்சைக் குத்துதல், முடி வளர்த்தல், ஒருவரின் ஆடைகளின் தோற்றம் முதலான தனிமனித நடத்தைகளை கட்டுப்படுத்துவது போன்ற விடயங்களை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. குறித்த காரணங்களுக்காக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமல் 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைக்க முடியும். வடகொரியாவில் மட்டுமே காணப்பட்ட சட்டங்கள் இலங்கையிலும் கொண்டு வரவே அரசாங்கம் முயற்சிக்கிறது.
கடந்த முறை 22ஆம் சீர்திருத்தம் கொண்டு வந்தபோது மக்கள் இத்திருத்தம் ராஜபக்ஷவினரை தண்டிக்க என ஆதரித்தார்கள். ஆனால் இது போன்ற சட்டதிட்டங்கள் கடைசியில் பொது மக்களுக்கே ஆபத்தாக அமையும் என்பதை மறந்துவிட வேண்டாம். இலங்கையில் தற்போது உள்ள சட்டத்திட்டங்கள் அரசியல்வாதிகளை தண்டிப்பதற்கு போதுமானது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலமானது தேவையற்றது. அதனாலேயே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக, அரசாங்கத்தைப் பற்றி குறை கூறினால் மற்றும் எதிராக குரல் எழுப்பினால் இச்சட்டத்தினை காட்டி அவரை கைது செய்து கட்டுப்படுத்தி கைது செய்ய முடியும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இச்சட்டமூலம் பொலிஸாரின் அதிகாரத்தை அதிகரித்துள்ளதுடன் அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை சட்ட ரீதியாக முன்னெடுக்கவே முன்மொழியப்பட்டுள்ளது.
இச்சட்டமூலம் கொண்டுவருவதனை தடுத்து நிறுத்தி கட்சி பாராது அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும். இல்லையென்றால் ஜனநாயகம் காணாமல்போய்விடும் என்றார்.