உத்தர பிரதேசத்தில் 60 மணி நேரம் இடைவிடாமல் பெய்த தொடர் மழையால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உத்தர பிரதேசம் முழுவதும் சனிக்கிழமை கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக சீதாபூர், லக்கிம்பூர் கெரி, பலராம்பூர், கோரக்பூர், அயோத்தி உட்பட 32-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. மாநிலம் முழுவதும் நேற்று வரை 60 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்தது.
கனமழை பாதிப்புகளால் உத்தர பிரதேசம் முழுவதும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக சீதாபூரில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
லக்கிம்பூர் கெரி, பலராம்பூர், அயோத்தி, கோரக்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் நேரிட்டு உள்ளன. வீடுகள் இடிந்தது, மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களால் மாநிலம் முழுவதும் 46 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. கனமழையால் 107 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
கங்கை, யமுனை, காக்ரா, ராப்தி, கண்டக், சோன், ஜிக்கோ உள்ளிட்ட நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. இதனால் 32 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் லக்னோ உட்பட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்து உள்ளன.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, “எல் நினோ பாதிப்பு காரணமாக உத்தர பிரதேசத்தில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 90 முதல் 73% வரை மழை அதிகரித்திருக்கிறது" என்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். மாநிலம் முழுவதும் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.