முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உடனடியாக பாரபட்சமற்றதும் நியாயமானதுமான விசாரணையை நடத்துமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ரங்க பண்டாரநாயக்க மற்றும் பொதுச் செயலாளர் மிதுன் ஜயவர்தன ஆகியோர் இணைந்து இன்று வியாழக்கிழமை (01) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில், அவரது பாதுகாப்புக் குழுவுடன் இணைக்கப்பட்டிருந்த அதிகாரி ஒருவருக்கும் ஊடக நிறுவனமொன்றின் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளருக்கும் இடையில் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
செப்டெம்பர் 30ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஒளிப்பதிவுக் கருவியால் தலையில் தாக்கப்பட்டதாகக் கூறி குறித்த பாதுகாப்பு அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் பிரதான அமைப்புகளில் ஒன்றாக நாம் வலியுறுத்துவது, பொதுமக்களுக்கு தகவல்களை அறிக்கையிடுவதற்கான ஊடகவியலாளர்களின் உரிமையும், கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
எனவே, இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரியின் உத்தியோகபூர்வ கடமைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதா அல்லது ஊடகவியலாளரின் சுதந்திரமான ஊடகப் பயன்பாட்டுக்கும் கடமைக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் உடனடியாகவும், பாரபட்சமற்ற வகையிலும், நியாயமான முறையிலும் விசாரணை நடத்த வேண்டும்.
நீதிமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் சமூகத்தில் காணப்படும் குடிமக்களின் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துகிறது. இந்தச் சம்பவத்தின் ஊடாக ஊடகவியலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பிலும் பாதுகாப்பின்மை காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
சம்பவம் தொடர்பில் எந்தவொரு தரப்பையும் முன்கூட்டியே குற்றவாளியாகக் கருதாமல், உண்மையான நிலைமையை வெளிக்கொணரும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.