ஊழியர் சேமலாப நிதியத்தையும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தையும் அவற்றின் உறுப்பினர்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்கும் வகையில் நிர்வகிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கடந்த காலத்தைப் போன்று இந்த நிதிகளை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு எந்தவிதமான இடமும் இல்லை என தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சில் நடைபெற்ற தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பல ஆண்டுகளாகக் கூட்டப்படாமல் இருந்த தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கூட்டப்பட்ட பதினோராவது சந்தர்ப்பம் இதுவாகும். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் நிர்வாகத்தை ஒருங்கிணைப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. தொடர்புடைய நிதியங்கள் தற்போது நிலைத்தன்மையான நிலையை அடைந்துள்ளன. அதற்கமைய, முறையான நிர்வாக மற்றும் முகாமைத்துவ முறைமைகளின் ஊடாக இந்த நிதியங்களை மேலும் திறமையானதும் பயனுள்ளதுமான முறையில் பேணுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றார்.
இக்கூட்டத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில்,
ஊழியர் சேமலாப நிதியத்தையும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தையும் ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான முன்மொழிவுக்கு சில தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். முந்தைய அரசாங்கங்கள் இந்த இரண்டு நிதியங்களையும் முறைகேடாகப் பயன்படுத்தியமையே இந்த எதிர்ப்புக்குக் காரணமாகும்.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொது நிதிகளை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு எந்தவிதமான இடமும் இல்லை. எந்தவொரு முன்மொழிவு தொடர்பான இறுதித் தீர்மானமும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே மேற்கொள்ளப்படும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் வலியுறுத்தினார்.
ஊழியர் நிதியங்களை முறைகேடாகப் பயன்படுத்த இடமில்லை - தொழில் அமைச்சர் உறுதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space