கலகொட அத்தே ஞானசார தேரரை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு, விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் தேரர்கள் போராட்டம் வெள்ளிக்கிழமை (23) எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது. 'ஜனாதிபதிக்கு பதவியைத் துறப்பது மற்றொன்று ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்குவது ஆகிய இரண்டு வழிகளே உள்ளன. எனவே எமது சாசனத்தை பாதுகாக்க தியாகம் செய்த ஞான சாட தேரருக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்க வேண்டும். பெலவத்தை தலைமையிலான அரசுக்கு நாங்கள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கிறோம் ஏன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர். 

தேரர்கள் போராட்டம் வியாழக்கிழமை (22) ஒரு வாரம் கடந்த நிலையில் கொட்டும் மழையிலும் பிக்குகள் கூடாரங்களை அமைத்து அங்கு தங்கியிருந்ததுடன், பிரித் பாராயணம், போதி பூஜை உள்ளிட்ட வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். பொதுமக்கள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி தான தர்மங்களிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராட்டப் பகுதிக்கு அருகில் நேற்று அதிகாலை கூரிய ஆயுதத்துடன் வந்த நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஞானசார தேரர் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவுள்ள நிலையில், அவருக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிக்குகள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் தொடர்பில் கஸ்ஸப்ப தேரர் கூறுகையில், 

ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் நாம் முன்னெடுக்கும் சத்தியாக்கிரகம் இன்று ஏழாவது நாளை எட்டியது. காவந்திஸ்ஸ யானைக்காக நினைவஞ்சலி நிகழ்வில் ஈடுபட்டிருந்தபோது, எமது பின்னால் நின்ற இருவர் தகாத வார்த்தைகளால் திட்டினர். அவர்களிடம் இரண்டு கத்திகள் இருந்தன. ஒன்று முதுகுப் பகுதியிலும் மற்றொன்று கால்ப் பகுதியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எமது அமைதியான போராட்டத்தைச் சீர்குலைத்து மக்களிடையே ஒற்றுமையைப் பிளவுபடுத்த முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பெலவத்தையில் உள்ள அரசாங்கத்துக்கு நாம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கின்றோம். ஜனாதிபதிக்கு முன்னால் இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று பதவியைத் துறப்பது; மற்றொன்று ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்குவது. அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

நாம் அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ ஜனாதிபதியைப் பதவியிலிருந்து அகற்றவோ போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. ஆனால், கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் மகா சங்கத்தினரைக் கொழும்புக்கு அழைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். நிலைமை மோசமடைந்தால் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்.

தனுஷ்க்கோடியிலிருந்து மன்னார் வரையிலும், மன்னாரிலிருந்து அநுராதபுரம் ஊடாக நான்கு வழித்தடங்களைக் கொண்ட வீதியை அமைப்பதாகக் கூறப்படும் திட்டம் தொடர்பில் பல கேள்விகள் உள்ளன. அநுராதபுரத்தின் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் குறித்து ஆவணங்கள், வர்த்தமானி அறிவித்தல்களுடன் நாம் விளக்கமளித்துள்ளோம். உண்மைகள் வெளிப்பட்டால் இந்தியாவின் வரலாறு தொடர்பில்கூட சில விடயங்கள் தலைகீழாக மாறக்கூடும்.

ருவன்வெலிசாய உள்ளிட்ட பௌத்த வரலாற்றுச் சின்னங்களையும் கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டும். இந்தியாவுக்குக் கீழ்ப்படிந்து, புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளை நிறைவேற்றும் கள்ளந்தோணி அரசாங்கமாகவே இதனை நாம் பார்க்கின்றோம். மகா சங்கத்தினர் இருக்கும் வரை பௌத்த மரபுகளையும் வரலாற்று அடையாளங்களையும் அழிக்க எவருக்கும் இடமளியோம் என்றார்.