இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம் கொடுப்பதற்காக முன்கூட்டியே திட்டங்களை வகுக்க வேண்டும். தித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்ததைப் போன்று, வெளிப்புற சவாலான இந்த உலகளாவிய நிலைமையையும் சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள் காணப்படுகிறது என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்ததார்.

எதிர்காலத்தில் உலகளவில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வது மற்றும் அதற்கான முன்னாயுத்த நடவடிக்கைகள் குறித்த உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் விசேட கூட்டம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் தலைமையில் திங்கட்கிழமை (8) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

எல்-நினோ நிலைமையினால் நாட்டின் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய சவால்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்தல் மற்றும் குடிநீரைப் பாதுகாப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க வலியுறுத்தியதுடன், இறுதித் திட்டங்களைத் தயாரிப்பதற்காக, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டமொன்றை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதற்கமைய, எல்-நினோ நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான திட்டங்களைத் தயாரித்து கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களுக்கும். அன்றைய தினம் சமர்ப்பிக்க வேண்டும். இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம்கொடுப்பதற்காக முன்கூட்டியே திட்டங்களை வகுக்க வேண்டும். கடந்த காலங்களில் தித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்ததைப் போன்று, வெளிப்புற சவாலான இந்த உலகளாவிய நிலைமையையும் சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள் காணப்படுவதாகவும், அது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றார்.