ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் தொடர்பான மரண விசாரணையை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை ஒத்திவைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (9) உத்தரவிட்டது.
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான சிசிரிவி மற்றும் தொலைபேசிப் பதிவுகள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக செவ்வாய்க்கிழமை (9) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்ததை அடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு செவ்வாய்க்கிழமை (9) கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு வலய குற்றப்பிரிவினரால் 9 ஆவது நாளாகவும் சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரான கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா, அவரது மனைவி, வீட்டின் பணியாளர்கள், கபில சந்திரசேனவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி ரியான்சி அர்ஷகுலரத்ன உள்ளிட்ட 21 சாட்சியாளர்கள் இதுவரை நெறிப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற விசாரணையில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எம். உதேஷ் தமயந்த, குற்றபுலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் சேனாதீர டி சில்வா மற்றும் பொலிஸ் சிசிடிவி பிரிவின் கான்ஸ்டபிள் மதுஷ சமீர சம்பத் ஆகியோர் சாட்சியமளித்தனர்.
உப பொலிஸ் பரிசோதகர் எம். உதேஷ் தமயந்த சாட்சியமளிக்கையில், சம்பவ இடத்திற்குச் சென்று இரு உறவினர்கள், மூன்று ஊழியர்கள் மற்றும் அங்கு வந்த பெண் மருத்துவர், பணியாளர்களிடம் வாக்குமூலம் பெற்றோம். பொலிஸ் சார்ஜன்ட் மூலம் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன" என்றார்.
இதேவேளை பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் சேனாதீர சாட்சியமளிக்கையில், மே 8 ஆம் திகதி அன்று காலை தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கிடைத்த தகவலின்படி கொழும்பு 3, பேதரிஸ் வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்றோம். அங்கு கழிவறைக்கு அருகில் நாற்காலி ஒன்றும், அதன் கீழே ஒரு நபர் விழுந்து கிடந்தார். நாற்காலிக்கு அடியிலும் அதன் மேலிருந்தும் இரத்த மாதிரிகள் பெறப்பட்டன. கழிவறை கதவில் வெளிர் நீல நிறப் பட்டியும், கதவின் மேற்பகுதியில் 2 மி.மீ அளவிலான சிறிய இடைவெளி ஒன்று காணப்பட்டது.
அனைத்து வழக்குப் பொருட்களும் கொழும்பு குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த அறையில் உள்ள கழிவறைக்கு இடது பக்க அறை வழியாகச் செல்ல முடிந்தபோதிலும், கழிவறைக்குள் நுழைய முடியாதபடி அந்த அறை பூட்டி வைக்கப்பட்டிருந்தது என்றார்.
பொலிஸ் கான்ஸ்டபிள் மதுஷ சமீர தெரிவிக்கையில், பிற்பகல் 1.30 க்கு டிவிஆர் இயந்திரத்தைப் பரிசோதித்தோம். 5 கேமராக்கள் இயங்கிய போதிலும், அதன் திகதி 2004.01.10 என மாறியிருந்தது. 2025 ஆம் ஆண்டுக்குரிய பதிவுகள் மீள் பதிவு செய்யப்படாமல் அப்படியே இருந்தன. வாகன தரிப்பிடத்திலுள்ள மின்சுற்று அறையிலிருந்த பெட்டகத்தில் இருந்த அந்த இயந்திரத்தின் பயனர் பெயரை அங்கிருந்த ஒருவரே தந்தார். பிற வீடுகளின் சிசிரிவி காட்சிகள் பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டன என்றார்.
இதன்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், சாட்சியங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு மேலும் அவகாசம் தேவை என்றும், அடுத்ததாக மேலும் இரு சாட்சிகளை அழைக்கவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிவான் 28 ஆவது சாட்சியை எச்சரித்திருந்ததுடன், மேற்படி வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டிருந்தார்.