ஒரு பாதுகாப்பான சமூகத்தை கட்டியெழுப்பும் பணியில் இன்று நாடு முன்னேற்றம் கண்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் விசேட வைத்தியர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ  தெரிவித்தார்.

கண்டியிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில்  நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (09) இடம் பெற்ற ஊடவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டஙகளைச் சேர்ந்த சுமார் 100 ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இதற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதில் அவர் மேலும் கூறுகையில்,

மத்திய மாகாண பாதுகாப்பு சபையின்  அறிக்கையின் படி குற்றச் செயல்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளதாக தெரியவருகிறது. குறிப்பாக போதையுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் மாதம் 500 ல் இருந்து 300 ஆகக் குறைந்துள்ளது.

2000 வருட வரலாற்றைக் கொண்ட எமது நாட்டில் சுதந்திரத்தின் பின் பிரபுத்துவ சிந்தனை கொண்ட ஒரு வர்க்கத்தினர் இரண்டாகப் பிரிந்து தமக்குள் மாறி, மாறி ஆட்சியமைத்தனர். இறுதியில் இரண்டு வருடங்களுக்கு முன் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.

இந்தியாவில் உள்ள ஒரு யாசகர் கூட நிதி திரட்டி அனுப்பும் அளவு நாம் வீழ்ச்சியடைந்தோம். கடந்த இரண்டு வருடங்களில் எதுவித ஊழலும் இல்லை. களவு இல்லை, நாட்டை சுரண்டுவதில்லை. அபிவிருத்தி என்ற போர்வையில் தரகுப் பணம் பெற்று நாட்டை சுரண்டுவதும் இல்லை.  வீண் செலவினங்கள் இல்லை. ஆடம்பர வைபவங்கள் இல்லை.அரசியல் பிரமுகர்களுக்கும் பிரபுக்களுக்குமான அதிக பணச்செலவு கொண்ட ஆடம்பரமான  பாதுகாப்புசெயற்பாடுகள் இல்லை. இதன் காரணமாக செலவினங்கள் குறைந்து  நாடு இப்போது படிப்படியாக முன்னேறி வருகிறது.

எமது அடுத்த இலக்கு கிராமியப் பொருளாதாரத்தை வளம்படுத்துவதாகும். அதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சுகாதாரத்துடன் தொடர்புடைய சகல துறைகளிலும் மத்திய மாகாணம் தேசிய சராசரியை விட கீழ் நிலையில் உள்ளது. உதாரணமாக சிசு மரணம், மந்த போசனை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தற்போது இவ்வாறான பல விடயங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதாவது ஒரு பாதுகாப்பான சமூகத்தை நோக்கி நாடு நகர்கிறது என்றார்.