மட்டக்களப்பு, திருப்பெருந்துறை பகுதியில் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது எனக் கூறி வேலி அமைக்க முற்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (10) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வீதியோரமாக அமைந்துள்ள வெற்றுக் காணியொன்று கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எவராலும் உரிமை கோரப்படாத நிலையில் இருந்ததாகவும், அப்பகுதி இளைஞர்கள் அதனை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற ஒருவர், குறித்த விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியான 14 பேர்ச்சஸ் காணியை அதன் உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறி, அதனைச் சுற்றி வேலி அமைப்பதற்காக மரக்கட்டைகளைக் கொண்டுவந்துள்ளார்.

இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு வேலி அமைக்கும் பணியைத் தடுத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காணி கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதனை மைதானமாகப் பயன்படுத்துவதற்கு பிரதேச செயலாளர் விளையாட்டுக் கழகத்திற்கு எழுத்துமூல அனுமதிக் கடிதம் வழங்கியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், காணியை யாரிடமிருந்து கொள்வனவு செய்தார் என்ற விவரத்தை ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி தெரிவிக்க மறுப்பதாகவும், தனது புதல்வருக்குச் சொந்தமான காணி எனக் கூறுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன், குறித்த அதிகாரி இரண்டு வருடங்களுக்கு முன்னரும் காணியைக் கையகப்படுத்த முயன்றபோது பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் காணிக்கு வேலி அமைக்க முற்பட்டதால் பொதுமக்களுக்கும் குறித்த அதிகாரிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது, வேலி அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகளைப் பொதுமக்கள் அகற்றி, அவற்றை அவரது வாகனத்தில் ஏற்றிவிட்டு அவரை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, குறித்த காணி தனியாருக்குச் சொந்தமானது எனவும், அதற்கான காணி வரைபடம், உறுதி உள்ளிட்ட ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும், காணி தனியாருக்குச் சொந்தமானது எனப் பிரதேச செயலாளர் எழுத்துமூலமான கடிதம் வழங்கியுள்ளதாகவும், அதன் பிரதிகளை கிராம உத்தியோகத்தரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.