யாழ்ப்பாணம், குருநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், படகுடன் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளனர்.
குறித்த இரு மீனவர்களும் கடந்த 09 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் துறைமுகத்திலிருந்து வழக்கம்போல சிறிய ரக நாட்டுப் படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, கடலில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றம், பலத்த காற்று மற்றும் கடும் மழையினால் படகு கட்டுப்பாட்டை இழந்து திசைமாறியுள்ளது. இதனால், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது.
படகில் எரிபொருள் குறைந்த அளவிலேயே இருந்ததால், இரு மீனவர்களும் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் தங்களது படகை இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தின் பாம்பன் வடக்குக் கடற்கரை துறைமுகப் பகுதியை நோக்கிச் செலுத்தியுள்ளனர்.
இலங்கைப் படகு ஒன்று வருவதைக் கவனித்த அப்பகுதி மீனவர்கள், தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மண்டபம் கடல்சார் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அங்கு சென்ற கடல்சார் பொலிஸார், இரு மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர், விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக இரு மீனவர்களும் கடல்சார் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.