நாட்டில் போதைப்பொருள் கடத்தல், சர்வதேச கடற்பரப்பில் இடம்பெறும் கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் செயற்கைப் போதைப்பொருட்களின் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான போதைப்பொருட்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் சட்ட திருத்தங்களின் ஊடாக, கட்டளைச் சட்டத்தில் 54 AA என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுவதுடன், சர்வதேச கடற்பரப்பில் அபாயகரமான போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல் மற்றும் கடத்தல் ஆகியவை குற்றங்களாகக் கருதப்படும்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மற்றும் எந்தவொரு நாட்டினதும் தேசியக் கொடியின் கீழ் பதிவு செய்யப்படாத கப்பல்கள் ஆகிய இரண்டுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
குற்றத்தில் ஈடுபடுபவர் இலங்கைப் பிரஜையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இக்குற்றங்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும், நாட்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்ற போதிலும், நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாகத் தெரியவில்லை. இந்தளவு பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்படும் நிலையில், நாட்டில் போதைப்பொருட்களின் பரவல் உண்மையில் குறைந்துள்ளதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.