‘கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலையத்தின் எதிரே பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, சுதந்திரமான உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்’ என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பண்ருட்டி வட்டம் அண்ணா கிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒறையூர் ஊராட்சியில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஊராட்சி செயலாளர் அருள் குமாருக்கும், பணித்தளப் பொறுப்பாளராகப் பணியாற்றிய கண்மணிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளனர்.
இப்புகார்கள் தொடர்பான விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கண்மணியின் கணவர் லட்சாதிபதியை விடுவிக்கக் கோரி, கடந்த நவ.13-ம் தேதி காவல் நிலையம் சென்ற கண்மணி, காவல் நிலையத்தின் எதிரே தனது உடலில் பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்துள்ளார். தீப்பற்றிய நிலையில் காவல் நிலையத்துக்குள் ஓடிய அவரை, அங்கிருந்த காவல் துறையினர் தீயை அணைத்து மீட்டுள்ளனர்.
பலத்த தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்மணி, நவ.16-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி வரும் காவல் நிலையத்திலேயே ஒரு பெண்ணின் உயிர் பறிபோயிருப்பதற்கு யார் பொறுப்பேற்பது?
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், பொதுமக்களின் புகார்களை விசாரித்து நீதி வழங்க வேண்டிய காவல் நிலையத்திலேயே இத்தகைய துயரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது காவல்துறையின் பொறுப்புணர்வையும் அரசின் நிர்வாகத் திறனையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்குச் சீர்கெட்டுப் போயிருக்கிறது என்றால், உள்நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களும் விவாதிக்கும் அளவுக்கு மாநிலத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது.
தினந்தோறும் நிகழும் வன்முறைகளும், காவல் நிலைய மரணங்களும் தமிழகத்தின் அமைதிப் பூங்கா என்ற பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளன. எனவே, உயிரிழந்த கண்மணியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். அவரது குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, சுதந்திரமான உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.