எரிவாயு தட்டுப்பாட்டிற்குத் தீர்வாக, 3,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை ஏற்றிய கப்பல் இலங்கைக்கு வந்தடைந்துள்ளதைத் தொடர்ந்து, வீட்டு மற்றும் வர்த்தக பாவனையாளர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் கட்டம் கட்டமாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

எரிவாயு தொகுதியை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இதன் மூலம் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை படிப்படியாக மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீட்டுப் பாவனையாளர்கள் மற்றும் வர்த்தக பாவனையாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பல கட்டங்களாக விநியோகம் வழமைக்குத் திரும்பும்.

விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்னர் எரிவாயு சிலிண்டர்களின் கையிருப்பு குறித்து உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்துகின்றோம்.

எரிவாயு கையிருப்பு தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள, நுகர்வோர் தமக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட லாப் எரிவாயு முகவர்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவனத்தின் 1345 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி விபரங்களை அறிந்து கொள்ளலாம் .