வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் மகா உற்சவத்தை முன்னிட்டு இலங்கையின் மிக நீண்ட தூரப் பாதயாத்திரைகளில் ஒன்றாக விளங்கும் நீண்டகாலப் பாரம்பரியம் மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயம் நோக்கிய பாத யாத்திரை சனிக்கிழமை (23.05.2026) காலை-08.45 மணிக்கு வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல் சாமி தலைமையில் ஆரம்பமாகியது.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வேல்களுடன் அரோகராக் கோஷம் முழங்கப் பாதயாத்திரைக் குழுவினர் சந்நிதியான் ஆச்சிரமத்தை அடைந்து அங்கு விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர். அனைத்து அடியவர்களுக்கும் காலை வேளை ஆகார உபசாரங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு தொகை நிதியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடியவர்கள் சந்நிதியான் ஆச்சிரம சுவாமிகளின் ஆசிர்வாதம் பெற்றுத் தமது யாத்திரையைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதேவேளை, இவ் வருடப் பாத யாத்திரையில் ஆரம்பத்திலிருந்து 110 அடியவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் மேலும் பல அடியவர்கள் இடைநடுவில் இணைந்து கொள்ளவுள்ளனர்.