டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர், பொகவந்தலாவை பெற்றோசோ பகுதி வீடொன்றில் மறைந்திருந்தபோது பொதுமக்களின் உதவியுடன் சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்தில் கணவன், மனைவி இருவரும் கடந்த வியாழக்கிழமையன்று குறித்த வர்த்தக நிலையத்தோடு இணைந்திருந்த குடியிருப்பில் வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தோடு தொடர்புடைய நபர், பெண்மணி அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளமை விசாரணைகளின் பின்னர் உறுதியாகியதையடுத்து மேற்படி வர்த்தக நிலையத்தின் அருகில் உள்ள பாதுகாப்பு கமராக்களின் உதவியுடன் பொலிஸார் சந்தேக நபரை அடையாளம் கண்டனர்.
அதனையடுத்து, சந்தேக நபரைப் பற்றிய தகவல்களைத் தருமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியிருந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பொகவந்தலாவை பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேக நபர் மறைந்திருந்தமையை பிரதேச மக்கள் அறிந்து அவ்விடத்துக்குச் சென்று அவரைப் பிடித்துள்ளனர்.
பின்பு பொகவந்தலாவை பொலிஸார், தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்று சந்தேக நபரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பெருமளவு மக்கள் திரண்டு நின்றனர். இதன் காரணமாக சந்தேக நபரிடம் வாக்குமூலங்களைப் பெற அட்டன் பொலிஸ் தலைமை காரியாலய பொலிஸார் அவரை கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸ் வாகனத்தில் அட்டனுக்கு அழைத்துச் சென்றமை முக்கிய விடயமாகிறது.
கைதான சந்தேக நபர் பதுளை பசறை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பொகவந்தலாவை கெம்பியன் பகுதி வீடொன்றில் தங்கியிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.