கனடாவில் மருத்துவ காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில், கடந்த ஆண்டில், 29,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில், மருத்துவரை சந்தித்துவிட்டு, பின்னர் அறுவை சிகிச்சை அல்லது ஸ்கேனுக்கான அப்பாயிண்ட்மென்டுக்காக காத்திருக்கும் காலகட்டத்தில், ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாக ஆய்வமைப்பு ஒன்று தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
2025க்கும் 2026க்கும் இடையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், அறுவை சிகிச்சை அல்லது ஸ்கேனுக்கான அப்பாயிண்ட்மென்டுக்காக காத்திருக்கும் காலகட்டத்தில், ஒரே ஆண்டில் 29,000 கனேடியர்கள் உயிரிழந்துள்ளதாக SecondStreet.org என்னும் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் அந்த ஆய்வமைப்பு இத்தகைய தகவல்களை திரட்டிவரும் நிலையில், மருத்துவ காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களில் இதுவரை 129,892 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.
விடயம் என்னவென்றால், எல்லா மாகாணங்களும் இப்படி உயிரிழப்போர் எண்ணிக்கையை ஆவனப்படுத்துவதும் இல்லை, வெளிப்படையாக பகிர்வதும் இல்லை என்கிறார் SecondStreet.org அமைப்பின் தலைவரான கோலின் க்ரெய்க் என்பவர்.
அப்படி கனடாவில் எல்லா மாகாணங்களும் உயிரிழப்பு தொடர்பான தரவுகளை வெளியிட்டிருந்தால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகம் என்னும் விடயம் வெளியாகியிருக்கும் என்கிறார்.
அதே நேரத்தில், இப்படி உயிரிழப்போர் எண்ணிக்கையை வெளியிடுவது, மருத்துவ அமைப்பின் மீதே மக்கள் சந்தேகப்பட வழிவகை செய்யக்கூடும் என்கின்றன சில தொண்டு நிறுவனங்கள்.
ஏனென்றால், அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒருவர் சாலையைக் கடக்கும்போது விபத்தில் உயிரிழந்துவிட்டால், அதுவும் உயிரிழந்தோர் எண்ணிக்கையில்தான் வரும்.
ஆனால், அவர் அறுவை சிகிச்சைக்காக காத்திருந்ததால் உயிரிழக்கவில்லையே என்கின்றார் Ontario Health Coalition என்னும் அமைப்பைச் சேர்ந்த நட்டாலி மெஹ்ரா என்பவர்.
ஆனால், மருத்துவ காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மாகாண அரசுகள் வெளியிடவேண்டும், பிரச்சினை தெரிந்தால்தானே பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறையைக் கண்டறிய முடியும் என்கிறார் SecondStreet.org அமைப்பின் தலைவரான கோலின் க்ரெய்க்!