உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நடத்திய புத்தக வெளியீட்டு விழாவை முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நிகழ்வானது ராஜபக்சக்களை வெள்ளை பூசி காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள நவீன் திஸாநாயக்க, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னாலுள்ள சூத்திரதாரியை அம்பலப்படுத்துவதற்காகவே இந்நிகழ்வு நடத்தப்பட்டதாகக் கூறினார். இருப்பினும், அங்கு அடையாளம் காட்டப்பட்ட நபர் சஹ்ரான் ஹாஷிம் என்றும், அவர் ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்துவதற்கான நிகழ்வொன்று நடைபெற்றது. பெரும் ஆச்சரியம் என்னவென்றால், அந்த சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்த ஒருவராவார்' என்று நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு நடத்தப்பட்டமை ஒரு முரண்பாடான நகைச்சுவை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன மற்றும் தலதா அதுகோரள உள்ளிட்ட பல எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறித்து அவர் தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான கண்டறிதல்களை மையமாகக் கொண்டு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவினால் இந்த புத்தக வெளியீட்டு விழா நடத்தப்பட்டதுடன், இதில் பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.