இலவச சுகாதார சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்குடன் , 555 மில்லியன் ரூபாவுக்கும் அதிக முதலீட்டில் கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன இதய வடிகுழாய் ஆய்வக பிரிவு (கெத்லேப்), டிஜிட்டல் ஆஞ்சியோகிராபி பிரிவு மற்றும் லித்தோட்ரிப்ஸி பிரிவு ஆகியன செவ்வாய்க்கிழமை (30) சிகிச்சை சேவைகளுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாட்டில் தற்போது 10 ஆகக் காணப்படும் 'கெத்லப்' பிரிவுகளின் எண்ணிக்கையை இவ்வருட இறுதிக்குள் 26 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த விஸ்தரிப்புத் திட்டத்திற்காக திறைசேரி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகமை (ஜைகா) ஆகியவற்றின் நிதியுதவியுடன் 3,103 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. கொழும்பு, கண்டி, காலி ஆகிய தேசிய வைத்தியசாலைகளுடன் மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், பதுளை, இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய பிரதான வைத்தியசாலைகளிலும் இந்த அலகுகள் நிறுவப்படவுள்ளன.
இவ்வாரத்தில் மாத்திரம் மேலும் 4 புதிய கெத்லேப் பிரிவுகள் திறக்கப்படவுள்ளதால், சிகிச்சைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைத்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 217 இலட்சம் மக்கள் தொகையில் 48 இலட்சம் பேர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே வாழ்வதால், எதிர்கால தேசிய திட்டமிடல்களில் கொழும்பு மாவட்டத்துக்கு மேலும் சில மூன்றாம் நிலை வைத்தியசாலைகளை சேர்க்க வேண்டிய அவசியமும் தற்போது எழுந்துள்ளது என்றார்.