இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய மற்றும் மிக மோசமான நிலக்கரி ஊழலுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் முறையாக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழுலுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்திய இந்நிலக்கரி ஊழல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், புதிய சான்றுகளுடன் கூடிய சத்தியக்கடதாசியை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தி, சுற்றுச்சூழலையும் நாசமாக்கிய இந்த பாரிய நிலக்கரி ஊழல் குறித்து நாம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் விளைவாகவே, அதற்குப் பொறுப்பான அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவிகளைத் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மக்களுக்கான எமது கடமையை நிறைவேற்றியவர்கள் என்ற அடிப்படையில், இந்த ஊழல் தொடர்பான முதற்கட்ட சாட்சியங்களை நாம் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் ஒப்படைத்திருந்தோம். அதனைத் தொடர்ந்து, அந்தச் சான்றுகளை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு எமக்கு விடுத்த அறிவித்தலுக்கு அமைய, எமது புதிய நிலைப்பாடுகள் மற்றும் கூடுதல் விபரங்கள் அடங்கிய சத்தியக்கடதாசியை இன்று நாம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பித்துள்ளோம்.

இந்த விசாரணை ஆணைக்குழுவானது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இயங்குகிறது. எனவே, இது அரசியல் தலையீடின்றி சுயாதீனமாகச் செயற்பட்டு அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுக்க வேண்டும். அத்துடன், அனைத்துத் தரப்பினரும் சட்டத்தரணிகள் ஊடாகத் தங்கள் நியாயங்களை முன்வைக்க வழிவகை செய்து, முறையான சாட்சியங்களின் அடிப்படையில் நீதியை நிலைநாட்ட வேண்டும்.

இந்த விசாரணையின் மூலம் ஊழல்வாதிகள் அடையாளம் காணப்படுவதுடன், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தீர்க்கமான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நாம் முழுமையாக நம்புகிறோம் என்றார்.