காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் தாமதமடைவதற்கு எந்த விதத்திலும்  நான் காரணம் இல்ல. அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கும்போது அதனை  உறுதிப்படுத்த வேண்டுமென சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுகம் தொடர்பில் நேற்றைய தினம் சபையில் ரவூப் ஹக்கீம் எம்.பி. உரையாற்றுகையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகள் எந்த விதத்திலும் என்னால் தாமதமடையவில்லை. நாம் நாட்டுக்காகவே அனைத்து திட்டங்களையும் முன்னெடுக்கின்றோம். நாட்டுக்குத் தேவையற்றதை விலக்கி, தேவையானதை கண்டிப்பாக நிறைவேற்றி வருகின்றோம்.


அது தொடர்பில் வரவு, செலவு திட்டத்தின் போது ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பான அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் லொஜி ஸ்டிக் கம்பெனியுடனான ஒப்பந்தம் தொடர்பில் அவர் தெரிவித்திருந்தார்.பயண வழிகாட்டி

அதனால் எவரும் எமது பொக்கட்டுகளுக்கு பணத்தை வழங்கி எந்த காரியத்தையும் இந்த நாட்டில் சாதிக்க முடியாது. அது போன்ற நடவடிக்கைகள் ரவூப் ஹக்கீம் அமைச்சராக இருந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் எம்மிடம் அது முடியாது.

காங்கேசன்  துறைமுக அபிவிருத்தி தொடர்பில் நானும் புதிதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சரும் தேவையான வேலை திட்டங்களை மேற்கொள்வோம் அது தொடர்பில் ரவூப் ஹக்கீம் எம்.பி. கவலைப்படத் தேவையில்லை.

காங்கேசன் துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகள் கடந்த இரண்டு வருட காலமாக தாமதமாகியமைக்கு நான் தான் காரணம் என ரவூப் ஹக்கீம் எம். பி. கூறுவதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.

உண்மையில் என்னால் தான் அந்த தாமதம் நிகழ்ந்தது என்றால் அவர் அதனை உறுதியாகக் கூற வேண்டும். உண்மையில் எந்த விதத்திலும் அதற்கு நான் தடையாக இருந்ததில்லை. நான் நாட்டுக்கு மிக நேர்மையாக சேவை செய்பவன்.

அவ்வாறு ஒரு குற்றச்சாட்டை ஹக்கீம் எம்.பி. முன்வைப்பாரானால் அவர் முதுகெலும்பை நிமிர்த்தி உறுதியுடன் அதை தெரிவிக்க வேண்டும். சபையில் வெறுமனே ‘கொஷிப்’போன்று அவர் கருத்துக்களை முன் வைக்க முடியாது என்றார்.

அதன் போது குறுக்கீடு செய்த தற்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அருண கருணாதிலக்க உண்மையில் விடயத்துக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் காத்திரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்தார்.

அதனால் தான் அந்த திட்டத்தை மேற்கொள்வதில் எனக்கு சுலபமாக அமைந்துள்ளது. அதேவேளை ரவூப் ஹக்கீம்  போன்றவர்கள் சிறுபிள்ளைத் தனமான கூற்றுக்களை முன் வைக்காது பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.