திருகோணமலை - மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ரொட்டுவெவ மற்றும் மிரிஸ்வெவ பகுதிகளில் சுமார் 30 வருடங்களாக சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக, அவர்களை நேரில் சந்தித்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடல், நேற்று(07.10.2026) இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதிகளில் 450க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன், பல குடும்பங்களின் வாழ்வாதாரம் சேனைப் பயிர்ச்செய்கையுடன் தொடர்புபட்டுள்ளது. 

தற்போது சோளம், கச்சான் உள்ளிட்ட பயிர்களை மேற்கொள்ளும் பருவகாலமாக இருந்தும், காணி தொடர்பான பிரச்சினையால் தங்களால் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முடியாமல் சிரமப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.

மேலும், கொட்டில்களில் தங்கி விவசாயம் செய்து வருபவர்களிடம், “இந்தக் காணி எங்களுடையது இங்கு பயிர்ச்செய்கை செய்யக்கூடாது, செய்தால் அகற்றுவோம்” என அதிகாரிகள் கடுமையான தொனியில் எச்சரிப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மொரவெவ பிரதேச செயலாளர் மற்றும் வனப் பாதுகாப்பு மாவட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளையும் நியாயமான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளதாகவும், இதுவரை எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

காணி தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அவை முறையான விசாரணை மற்றும் சட்டரீதியான நடைமுறையின் ஊடாகத் தீர்க்கப்பட வேண்டும். மக்களின் காணி உரிமை, வாழ்வாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் விவசாயிகளுக்கான காணி பிரச்சினைகளை உரிய முறையில் தீர்த்து, சேனைப் பயிர்ச்செய்கையையும் ஊக்குவித்து, தேவையான அபிவிருத்தி மற்றும் விவசாய உதவிகளை வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இங்கு தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று கேட்டு அறிந்து, அவர்களுக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான எனது முன்னெடுப்புகள் தொடரும். மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். நியாயமான தீர்வு கிடைக்கும் வரை மக்களுடன் நான் தொடர்ந்து இருப்பேன் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.