காலி - தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில 13 ஏக்கர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால், காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் உயிரிழந்த பாட்டியின் பேத்தியாவார்.

தாக்குதலினால் அவரது ஒரு கை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் தெலிகட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்த பெண்ணின் மற்றொரு மகளின் கணவர் எனவும், அந்த மகள் தற்போது இத்தாலியில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் உனவட்டுன, தலவெல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது. நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எல்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தெலிகடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகரின் பேரில், குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.