காலி, மகாமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றினை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் கட்டளச்சட்டத்தின் அத்தியாயம் 54 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சிறைச்சாலை வளாகம் உத்தியோகபூர்வமாக “மகாமோதர சிறைச்சாலை” என அழைக்கப்படும்.
இச்சிறைச்சாலையின் அதிகார வரம்பானது முழு நாட்டையும் உள்ளடக்கியதாக அமையும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசேட உத்தரவில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று ( 07) செவ்வாய்க்கிழமை கொழும்பில் வைத்து கையெழுத்திட்டுள்ளார்.
இது தொடர்பாக நீதி அமைச்சு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளதாவது,
தற்பொழுது மூடப்பட்டுள்ள மகாமோதர வைத்தியசாலை வளாகத்தின் ஒரு பகுதியில், தற்காலிக அடிப்படையில் இந்த புதிய சிறைச்சாலை இயங்கவுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் கைதிகள் நெருக்கடியைத் தொடர்ந்து, நாட்டின் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் அவசர நடவடிக்கையாக இந்த புதிய சிறைச்சாலை நிறுவப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.