2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று புதன்கிழமையுடன் (08) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பச் செயல்முறையில், பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் இருவரும் தனித்தனியாக பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழி தளத்தின் ஊடாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழியைத் தவிர வேறு எந்த முறையிலும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான [www.doenets.lk] ஊடாக பார்வையிட்டு, Our Services பிரிவின் கீழ் உள்ள Exam Information Centre ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

ஏற்கனவே பயனர் கணக்கைக் கொண்டுள்ளவர்கள் தங்களது பரீட்சை சுட்டெண் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

புதிய பயனர்கள் தேசிய அடையாள அட்டை எண் மற்றும் தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன் தொழில்நுட்ப மற்றும் பொதுவான வழிமுறைகளை கவனமாக வாசிப்பதுடன், விளக்கக் காணொளியையும் பார்வையிடுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மறுபரிசீலனைக்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதனை கடன் அட்டை (Credit Card), பற்று அட்டை (Debit Card) அல்லது தபால் நிலையம் ஊடாக செலுத்தலாம்.

கட்டணம் செலுத்திய பின்னர் விண்ணப்பத்தின் PDF பிரதியை பதிவிறக்கம் செய்து பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் குறுந்தகவல்  ஒன்றும் அனுப்பப்படும்.

ஒவ்வொரு பரீட்சார்த்தியிடமிருந்தும் ஒரு இணையவழி விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், மறுபரிசீலனைக்காக செலுத்தப்பட்ட கட்டணம் எந்த நிலையிலும் மீளச் செலுத்தப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 அல்லது 011 278 5231 உள்ளிட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.