சென்னையில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை ராஜாஜி சாலை, நாராயணப்பா தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சேகர்பாபு கலந்துகொண்டு பேசினார்.
அப்போது தமிழக முதல்வர் விஜய், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தவெக-வை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இதையடுத்து சேகர்பாபு மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சேகர்பாபுவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதற்கிடையே, பாரிமுனை வடக்கு கடற்கரை காவல் நிலையம் பரபரப்பான பகுதியாக இருப்பதால், விசாரணையை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு சேகர்பாபு எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள், ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருத்துகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் தொடர்பாக போலீஸார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் எனக் கூறி அவரை அனுப்பி வைத்தனர்.
போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கில் இரு தினங்களுக்கு முன்னர் சேகர்பாபுவிடம் வேப்பேரி போலீஸார் விசாரணை நடத்தி இருந்த நிலையில், தற்போது வேறொரு வழக்கில் அவரிடம் மற்றொரு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர்.