ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் அவரது பெண் உதவியாளரின் நாட்டியப் பள்ளியில் கட்டுக்கட்டாக ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
வெளிநாட்டில் பதுங்கிய தொழிற்சங்கத் தலைவரின் மகனை கைது செய்யும் நடவடிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டார்.
அவரது குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வீரமணி மீது ஏற்கெனவே 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக கடந்த 28-ம் தேதி வீரமணி 3 வழக்குகளிலும், சாந்தி, மகேந்திர சிம்மன், லாசர் ஆகியோர் தலா ஒரு வழக்கிலும் கைது செய்யப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக கொளத்தூரில் உள்ள கணேசனின் வீட்டிலும், நீலாங்கரையில் சாந்தி நடத்தி வந்த நாட்டியப் பள்ளியிலும் சிறப்பு புலனாய்வுக்
குழு போலீஸார் சோதனை நடத்தி முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி உள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க லுக்-அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வீரமணி தனது குற்றங்களை மறைக்க முயற்சித்தபோது அவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்யவும், அதன்மூலமாக கிடைத்த தொகையில் பாலியல் வழக்கை மூடி மறைக்கவும் உதவியதாக பிரபல ரயில்வே தொழிற்சங்க மூத்த தலைவரது மகனான தொழிலதிபர் பிரகாஷ் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் சென்றார். அவரது பாஸ்போர்ட்டை முடக்கி, இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். இதுவரை 12 சிறுமிகளின் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.